2021 ஆம் ஆண்டிற்கான மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவப்போட்டியில் சிறந்த வெளிப்படுத்தல்களை வழங்கிய கிராம அலுவலர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நேற்று 09.03.2022 மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தின் கிராம அலுவலர் திரு.ஜெயபாலன் சுதர்சன்(J/87 சோனகதெரு வடக்கு ) அவர்கள் விருதினைப் பெற்றுள்ளார்.அவருக்கு எமது பிரதேச செயலகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.


மஹவ/ஓமந்தை புகையிரதப்பாதை நவீனமயமாக்கல் காரணமாக வவுனியாவிலிருந்து அனுராதபுரம் வரையிலான பகுதி 2022.03.01 தொடக்கம் 2022.08.31 வரை மூடப்பட்டிருக்கும். இக்காலப்பகுதியில் காங்கேசன்துறையிலிருந்து வவுனியா மற்றும் கொழும்பிலிருந்து அனுராதபுரம் வரை மட்டுமே வடக்கிற்கான புகையிரத சேவைகள் இடம்பெறும்.
குறிப்பு :
அனுராதபுரம் - வவுனியாவிற்கு இடையிலான பயணத்தை தொடர்வதற்கு பேரூந்து பயன்படுத்தப்படவுள்ளது.

வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, அந்தந்த நாடுகளின் தேவைக்கேற்ப கொவிட் தடுப்பூசி டோஸ்கள் பெற வேண்டும் எனின், அவற்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அதற்கான வசதிகளை செய்து கொடுக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், கொவிட் மற்றும் டெங்கு பரிசோதனைக்கு மேலதிகமாக மலேரியா பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் வலியுறுத்திளார்.

உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் நோயாக டெங்கு நோய் காணப்படுகின்றது. நம் அனைவரையும் அச்சுறுத்தி கொண்டும்⸴ நமது நாட்டில் அநேக உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்றாகவும் டெங்கு நோய் காணப்படுகின்றது.
மனிதனது நடவடிக்கையின் காரணமாகவே இந்நோய் அதிகம் பரவுகிறது. இந்த நோய் தொடர்பாக தொடர்ச்சியாக அதிக அச்சம் மக்களிடையே காணப்படுகின்றது.
இந்த டெங்கு நோய் என்றால் என்ன⸴ அது எவ்வாறு பரவுகின்றது⸴ அதனைத் தடுப்பதற்கான வழி முறைகள் போன்றவை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?
டெங்கு எனப்படுவது ஒருவகை வைரஸ் கிருமியாகும். இது கொசுக்கள் மூலம் மனிதனுக்குப் பரவி டெங்கு காய்ச்சலை உருவாக்குகின்றது. D1⸴ D2⸴ 3D⸴ 4D என நான்கு வகைப்படும். இவ் வைரஸ்கள் அனைத்தும் ஏடிஸ் என்னும் ஒரு வகைக் கொசுக்களால் மாத்திரம் பரவுகின்றன.
ஏடிஸ் வைரஸ்கள் முதலில் ஆபிரிக்க கண்டத்தில் உருவானது. ஆனால் இப்போது உலகெங்கிலுமுள்ள அனைத்து வெப்ப மண்டலப் பகுதிகளிலும் காணப்படுகிறது. ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
டெங்குக் காய்ச்சல் அறிகுறிகள்:-
டெங்கு நோய் அறிகுறிகள் கொசு கடித்து 4 முதல் 9 நாட்களில் பின்புதான் தெரியும். இந்நோய் தொற்றியவர்களுக்குக் கடுமையான காய்ச்சல்⸴ தலைவலி⸴ கண்ணுக்கு பின்னால் வலி ஏற்படல்⸴ தசைகள் மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படும்⸴ வாந்தி⸴ குமட்டல்⸴ உடற் சோர்வு⸴ உடல் அரிப்பு போன்ற பல அறிகுறிகள் தென்படும்.
முதலில் கால்களில் சிவப்புப் புள்ளிகள் தோன்றிப் பின் உடலில் எல்லா இடங்களுக்கும் பரவும். மூக்கு⸴ வாயிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்.
டெங்கு காய்ச்சலை சரி செய்யும் வழிகள்
கடுமையான காய்ச்சல்⸴ வாந்தி ஏற்படுவதனால் உடலில் நீர்ச்சத்துக் குறையும். எனவே நீர்ச்சத்து குறையாமல் தடுக்க சுத்தமான குடிநீர் மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குருதிச்சிறுதட்டுக்கள் இக்காய்ச்சலின் மூலம் குறைவதால் தினமும் பப்பாளி இலைச் சாற்றை குடித்தல் நன்று.
டெங்கு காய்ச்சல் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் எனவே தொடர்ந்து நிலவேம்புக் கசாயம் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
இவற்றுடன் நல்ல ஓய்வு எடுத்துக் கொள்வது மிக அவசியமாகும்.
டெங்கு பரவாமல் தடுக்கும் வழிகள்:-
டெங்கு காய்ச்சலைத் தடுக்கக் கூடிய மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இதற்கான தடுப்பு வழிமுறைகளை நாமே மேற்கொள்ள வேண்டும்.
நோயைப் பரப்பும் ஏடிஸ் வைரஸானது நல்ல நீரில் முட்டையிட்டு பெரிக்கக்கூடியது ஆகவே வீட்டில் நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும்.
வீட்டைச் சுற்றியுள்ள தேவையற்ற தண்ணீரை அகற்ற வேண்டும்.
யன்னல்கள்⸴ தூங்குமிடம் போன்றவற்றில் கொசுவலை பயன்படுத்தலாம். தோட்டங்களில் கொசுக்கள் வராமல் இருக்க மருந்து அடிக்க வேண்டும்.
வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டியின் பின் தங்கியுள்ள நீரை அடிக்கடி அகற்ற வேண்டும். தினமும் நீரைக் காய்ச்சிப் பருக வேண்டும்.
மக்கள் மத்தியில் டெங்கு நோய் பரவல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
டெங்கு நோயைத் தடுக்க உலகெங்கிலும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வரப்படுகின்றன எனினும் தற்போது வரை மருந்துகள் கிடைக்கப் பெறவில்லை என்பதால் தடுப்பதற்கான வழிகளை நாமே கடைப்பிடித்தால் மட்டுமே இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதுடன் நம்மைச் சார்ந்தவர்களையும் பாதுகாக்கலாம்.

2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற் பயிற்சிக்கு உட்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும் நடைமுறை ஒன்றை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த வேலைத்திட்டம், திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் சுமார் 98,000 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறவில்லை. இவர்களுள், கணிதப் பாடத்தில் சித்தியடையாத, ஆனால் பின்னர் அதன் பெறுபேற்றை பெற்றுத் தருவதாக கூறி க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவர்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகைமை பெறாத மாணவர்கள் பிரதேச செயலக மட்டத்தில் இனங்காணப்பட்டு அவர்களின் திறன்கள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.







