இனம்,மதம்,மொழி என வேற்றுமைப் பட்டிருக்கின்ற மனித சமூகத்தை ஒரே இலக்கை நோக்கி ஒற்றுமைப் படுத்துகின்ற ஒர் உன்னதமான பணியை மதங்களும் அவை சார்ந்த வழிபாட்டு முறைகளும் கூறுகின்றன.சகோதரத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையை அடிப்படையாக வலியுறுத்தும் இஸ்லாமிய சமுதாயத்தின் புனித ரம்ழான் நோன்புக் காலத்தின் இப்தார் நிகழ்வு எமது யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் மூன்றாவது தடவையாக நேற்று எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் S.சுதர்சன் தலைமையில் மாலை 5.15 மணிக்கு இடம்பெற்றது. பிரதம விருந்தினர்களாக யாழ்.மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் N.S.R.சிவரூபன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர். மௌலவி A.M. அப்துல் அஸீஸ் அவர்களின் கிராஅத் தொழுகையுடன் இந் நிகழ்வு ஆரம்பமாகியது. பிரதேச செயலாளர் தனது தலைமையுரையில் எமது பிரதேச செயலாளர் பிரிவில் அனைத்து மதங்களையும் சார்ந்த மக்கள் வாழ்கின்ற சூழலில் அவர்களது சமய நம்பிக்கைகள்,வழிபாட்டு முறைகளை பிற சமத்தவரும் அறிந்து கொண்டு அவற்றை மதித்து ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையுடன் வாழ இத்தகைய நிகழ்வுகள் முக்கிய பங்காற்றுகின்றன என சுட்டிக்காட்டினார்.தொடர்ந்து இப்தாரும் சமூக நல்லிணக்கமும் எனும் தலைப்பில் மௌலவி. M.A. பைசர் தனது கருத்துக்களை வழங்கினார்.மேலும் மாவட்ட செயலக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி S.M.A.நிஸ்தாக் அவர்களின் நன்றி உரை இடம்பெற்றது. பிரதம விருந்தினர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தனது உரையில் அனைத்து மதங்களிலும் விரதம்,நோன்பு முறைமைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன எனினும் அவை எல்லாம் மனிதர்களிடையே மனக்கட்டுப்பாட்டை உருவாக்கி இறை நம்பிக்கையை பலப்படுத்துவதுடன் ஆன்மீக ரீதியிலும்,உலகியல் ரீதியிலும் அவர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.அந்த வகையில் இஸ்லாம் மார்க்கம் கூறும் சகிப்புத்தன்மை, சகோதரத்துவம்,நல்லிணக்கம் என்ற விடயங்களை உள்வாங்கி அவர்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடாத்தப்படுவது மிகவும் வரவேற்கத்தக்க விடயம் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து மௌலவி.M.A.C. ஜாபிர் அவர்களின் அதான் வழிபாட்டுடன் இப்தார் நிகழ்வு நிறைவு பெற்றது.இந் நிகழ்வில் யாழ்ப்பாண பள்ளி வாசல்களின் நிர்வாகிகள்,பள்ளி வாசல்களில் கடமை புரியும் மௌலவிமார்கள்,உலாமாக்கள்,யாழ் முஸ்லிம்சிவில் சமூகப்பிரதிநிதிகள், பெண்கள்,இளைஞர்கள், யாழ்ப்பாண முஸ்லிம் உறவுகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.







